Release Date : ௦7 அக்டோபர் 2௦25
14 குழந்தைகளின் உயிரை பறித்த இருமல் மருந்து; ஸ்ரீசென் பார்மா நிறுவனத்திற்கு நோட்டீஸ்!
காஞ்சிபுரம்: இருமல் மருந்து குடித்த 14 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், விளக்கம் கேட்டு ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோல்ட்ரிப் சிரப் மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் ஆகிய இரு வேறு இருமல் மருந்துகளை உட்கொண்ட 1 முதல் 7 வயதுடைய 14 குழந்தைகள் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் 'டை எத்திலீன் கிளைக்கால்' (DEG) எனப்படும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், நச்சுத் தன்மையுள்ள ரசாயனம் கலந்த 'கோல்ட்ரிஃப்' (coldrif Cough Syrup) என்ற இருமல் மருந்தே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் எனவும், இந்த மருந்தை தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசென் பார்மா நிறுவனம் தயாரித்ததும் தெரிய வந்தது.அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருந்து தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகள் (samples) கைப்பற்றப்பட்டன. அது மட்டுமின்றி, ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.இதற்கிடையே, மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் தமிழ்நாட்டில் கோல்ட்ரிப் இருமல் மருந்து உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மத்தியப் பிரதேசத்திலும் இந்த மருத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரை செய்த குழந்தைகள் நல மருத்துவர் பிரவீன் சோனியை மத்தியப் பிரதேச மாநில போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் பிரவீன் சோனி மீது இந்திய தண்டனை சட்டத்தின் 276, 105 ஆகிய பிரிவுகளின் கீழும், மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை சட்டத்தின் 27A பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், 14 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஸ்ரீசென் பார்மா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு மருந்து கட்டுப்பாட்டுத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மண்டல மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி மணிமேகலை இந்த நோட்டீஸை அந்த நிறுவனத்தின் நுழைவாயிலில் இன்று ஒட்டி விட்டுச் சென்றார்.
www.anandabhaskar.com