Release Date : ௦7 அக்டோபர் 2௦25
135 ரன்களில் ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலிய அணி.. இந்தியாவும் தடுமாற்றம்.. பேட்டிங் வரிசையை மாற்றிய வைபவ்
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அண்டர் 19 அணி மூன்று ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற இந்திய அண்டர் 19 அணி டெஸ்ட் போட்டியையும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மெக்காய் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அண்டர் 19 அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். அலெக்சாண்டர் ஆறு ரன்களிலும், சைமன் பட்ஜ் டக் அவுட் ஆகியும் அடுத்தடுத்து வெளியேறினர்.அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் மட்டும் அதிகபட்சமாக 66 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் ஆஸ்திரேலிய அண்டர் 19 அணி 135 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சு தரப்பில் ஹெனில் பட்டேல் மற்றும் கிலான் பட்டேல் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அண்டர் 19 அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் விளையாடியது. எப்போதும் தொடக்க வீரராக விளையாடக்கூடிய வைபவ் சூர்யவன்சி இன்றைய ஆட்டத்தில் மூன்றாவது வீரராக களம் இறங்கினார். தொடக்க வீரராக விகான் மல்ஹோத்ரா விளையாடி வெறும் 11 ரன்கள் மட்டுமே சேர்த்தார். சிஎஸ்கே வீரர் மற்றும் கேப்டன்மான ஆயுஷ் மாத்ரே நான்கு ரன்களில் வெளியேற வைபவ் சூரியவன்சி இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் என 14 பந்துகளை எதிர் கொண்டு 20 ரன்கள் சேர்த்தார். அதேபோன்று கடந்த போட்டியில் அபாரமாக விளையாடிய விதான் திரிவேதி 25 ரன்கள் எடுக்க கிளான் பட்டேல் 26 ரன்கள் எடுத்தார். தற்போது முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அண்டர் 19 அணி 7 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருக்கிறது. இது ஆஸ்திரேலியா அண்டர் 19 அணியின் ஸ்கோரை விட ஒன்பது ரன்கள் கூடுதலாகும்..
www.anandabhaskar.com