மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் வட்ட மேசைகள் மற்றும் நாற்காலிகள் வழங்கும் விழா நடைபெற்றது. வட்ட மேசைகள் மற்றும் நாற்காலிகளை உயர் நீதிமன்றம் மதுரை கிளை மாண்புமிகு நீதியரசர் திருமதி எஸ்.ஸ்ரீமதி அவர்கள் மாணவர்களுக்கு அர்ப்பணித்தார். மேலும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி உற்சாகப்படுத்தினார். மேலும் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிந்து உயர் பதவிக்கு செல்ல அறிவுறுத்தினார். விழாவில் விடுதலை வீரர்களாய் மாறுவேடம் அணிந்த குழந்தைகள், பாரதியார் பாடல், கவிதை, தமிழ்நாடு வரலாறு பேச்சு முதலியவற்றில் பங்குபெற்ற பவித்ரா, பைரோஸ் பானு, முனீஸ்வரி, அபிஸ்ரீ மற்றும் மாறுவேட போட்டியில் பங்குபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பள்ளிக்கு வருகை புரிந்த மாண்புமிகு நீதி அரசர் அவர்களுக்கு பறை இசை முழங்க சிலம்பம் சுழற்றி மாணவ மாணவிகள் வரவேற்பு அளித்தனர். மாண்புமிகு நீதியரசர் திருமதி ஸ்ரீமதி அவர்கள் பள்ளி வளாகத்தில் மகிழ மரக்கன்று நட்டார். தலைமை ஆசிரியர் தென்னவன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஐந்து வகுப்பறைகள் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு முழு முயற்சியாளராக மதுரை மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு வழக்கறிஞர் மலைச்சாமி அவர்கள் செயல்பட்டு உதவி செய்தார். விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர் திரு மணிமாறன், ஆசிரியர் பயிற்றுநர் சிவபார்வதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் தஸ்லீம் பானு, சிலம்பம் மாஸ்டர் பாண்டி, சமூக ஆர்வலர் அசோக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை அருவகம் நன்றி கூறினார்.O. K. சிவா